💥 தொடர் -3️⃣
🌿 மார்க்க பெயரில் உலாவரும் பித்அதுகளும் அதற்கான அறிவியல் மறுப்புகளும் 🌿
💢# 📖 ஜின்னும் ருக்யாவும்: மூடநம்பிக்கைகளும் குர்ஆன்-சுன்னா காட்டும் உண்மைகளும்!💢
– அஷ்ஷைஹ் வஹீத் அப்துஸ்ஸலாம் பாலி மற்றும் டாக்டர் ஹைதம் தல்ஃத் அவர்களின் விரிவான வழிகாட்டல்
📌 1. ஜின் உலகத்தைப் பற்றிய அடிப்படை விதிகளும் மார்க்கச் சட்டங்களும்:
- மறைவான உலகம் (கைப்):
ஜின் என்பது மனிதர்களுக்கு மறைக்கப்பட்ட உலகம். கற்பனைகளையோ, மனிதர்களின் கதைகளையோ ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
- ஜின் உலகப் பிரிவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களிலும் முஸ்லிம்கள், காஃபிர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் நல்லவர்கள், கெட்டவர்கள் உள்ளனர்.
- மார்க்கக் கடமைகள்:
ஒரு ஜின் மனித உடலில் நுழைவது மார்க்கத்தில் தடையாக்கப்பட்ட பெரும் பாவமும் ஆகும். ஒரு முஸ்லிமான ஜின் ஜகாத் கொடுப்பது, குளிப்பது, ஹஜ் செய்வது, பார்வை தாழ்த்துவது மற்றும் புறம் பேசாமல் இருப்பது வரை மனிதர்களைப் போலவே மார்க்கக் கடமைகளுக்கு உட்பட்டதுதான்.
🎬 ஷேக் பகிர்ந்த அதிர்ச்சியூட்டும் நிஜச் சம்பவங்கள்:
சம்பவம் 1:
உணவில் ஷைத்தான்
(நபிகளார் ﷺ காலத்து அதிசயம்)
நபிகளார் ﷺ அவர்கள் உணவு உண்ண அமர்ந்தபோது, ஒரு சிறுமியும், தொடர்ந்து ஒரு கிராமவாசியும் (அஃராபி) வேகமாக ஓடிவந்து உணவைத் தொட முயன்றனர். நபி ﷺ அவர்கள் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டார்கள்.
நபிகளார் ﷺ கூறினார்கள்: "ஷைத்தான் பிஸ்மில்லாஹ் கூறாத இந்தச் சிறுமி மற்றும் கிராமவாசியின் மூலமாக உணவை ஹலாலாக்க முயன்றான். அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர்களின் கைகளுடன் சேர்த்து ஷைத்தானின் கையையும் நான் பிடித்துள்ளேன்!"
நூல்📚
ஸஹீஹ் முஸ்லிம்-5621,
ஸுனன் அபீ தாவூத் (ஹதீஸ் எண்: 3766) மற்றும் முஸ்னத் அஹ்மத் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது
சம்பவம் 2:
ஷைத்தானால் தொட முடியாமல் போன ஷேக்!
30 ஆண்டுகளுக்கு முன் ஷேக் அவர்கள் ஒரு பெண்ணுக்கு ருக்யா (மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட முறையில் ஓதி பார்த்தல்)செய்தபோது,
அதிலிருந்த ஜின்: "நான் இவளை விட்டு வெளியேறி உனக்குள் நுழைகிறேன்!" என்றது. ஷேக் அவர்கள் சற்றும் அஞ்சாமல் "முடிந்தால் நுழை!" என்றார்கள்.
சிறிது நேரத்தில் அந்த ஜின் அழத் தொடங்கி: "என்னால் இன்றைக்கு உனக்குள் நுழைய முடியாது. ஏனென்றால் நீ ஃபஜ்ருக்குப் பிறகு 100 முறை 'லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு…' ஓதியிருக்கிறாய்!" என்று கூறி ஓடிப்போனது.
சம்பவம் 3:
மூளைக் கட்டியை 'ஜின்' என்று நினைத்த பரிதாபம்!
ஒருவர் தனது தந்தைக்கு ஜின் பிடித்துவிட்டது என்று கூறி, ஆட்களை வைத்து அடித்து துன்புறுத்திக் கொண்டிருந்தார். ஷேக் அவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தினார். பரிசோதித்த போது அவருக்கு மூளையில் கட்டி (Brain Tumor) இருந்தது தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்து கட்டியை எடுத்ததும் அவர் பூரண குணமடைந்தார்.
சம்பவம் 4:
கூட்டுத் துஆவால் வெளியேறிய ஜின்!
ஷேக் அவர்கள் 40 வருடங்களுக்கு முன் ஒரு யூதப் பெண் ஜின் பிடித்திருந்த நபருக்கு ருக்யா செய்தபோது, அது வெளியேற மறுத்தது. உடனே ஷேக் அவர்கள் அங்கிருந்த அனைவரையும் கையேந்தித் துஆ செய்யச் சொல்லி, உருக்கமாகப் பிரார்த்தித்தார்கள். அனைவரின் உருக்கமான பிரார்த்தனையைக் கண்டு அந்த ஜின் அலறித் துடித்து ஓடிப்போனது.
📌 2. கூட்டு துஆ மற்றும் கழிப்பறைக் கதவு பற்றிய மார்க்கத் தெளிவுரைகள்:
அ) ருக்யாவின் போது கூட்டு துஆ ஓதுவது கூடுமா? (அஹ்லுஸ் ஸுன்னா பார்வை):
- அனுமதிக்கப்பட்டது: ருக்யா செய்யும்போதோ, ஒரு நோயாளிக்கு அல்லது கஷ்டத்தில் இருப்பவருக்கு நிவாரணம் பெறக் கூட்டாக இறைவனிடம் பிரார்த்திப்பதும், ஒருவர் துஆ கேட்கச் சுற்றியிருப்பவர்கள் 'ஆமீன்' சொல்வதும் மார்க்கத்தில் தாராளமாக அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள் நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றால் அல்லது நோயாளி அவர்களிடம் கொண்டு வரப்பட்டால், சுற்றியிருப்பவர்கள் அறியும் வகையில் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்:
«أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، اشْفِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا»
"மனிதர்களின் இறைவனே! இந்த நோயைப் போக்கிவிடு. நீயே குணமளிப்பவன்; உன்னுடைய நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை. எந்த நோயையும் எஞ்ச வைக்காத பூரண நிவாரணத்தை அளிப்பாயாக!"
நூல்: ஸஹீஹ் அல்-புகாரி
(Sahih al-Bukhari)
அத்தியாயம்: நோயாளிகள் அத்தியாயம் (Kitab Al-Marda)
ஹதீஸ் எண்: 5659 & 5675
- கவனத்தில் கொள்ள வேண்டியது:
இதைக் கடமையான ஒரு மார்க்கச் சடங்காக (உதாரணத்திற்கு: ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கட்டாயம் கூட்டாகவே துஆ செய்வது போல) மாற்றக் கூடாது. நோய் மற்றும் தேவைகளின் போது கூட்டாகப் பிரார்த்திப்பது சுன்னாவிற்கு உட்பட்டதே.
ஆ) கழிப்பறைக் கதவுகளை மூடி வைப்பது பற்றிய விளக்கம்:
- மூடநம்பிக்கை வேண்டாம்:
கழிப்பறைக் கதவைத் திறந்தே வைத்தால் ஷைத்தான் வீட்டிற்குள் வந்துவிடும் என்று அஞ்சுவதற்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ நேரடி ஆதாரங்கள் இல்லை.
- நடைமுறை ஒழுக்கம்:
எனினும், கழிப்பறைக் கதவுகளை மூடுவது சுகாதாரம், துர்நாற்றம் பரவாமல் தடுப்பது, மற்றும் மறைவிடங்களைப் (ஔரத்) பேணுவது போன்ற காரணங்களுக்காக நல்லதொரு வழக்கமாகும்.
- பாதுகாப்பு முறை: கழிப்பறைக்குச் செல்லும்போது நபி ﷺ அவர்கள் கற்றுத் தந்த "அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் குபுதி வல் கபாயித்" என்ற துஆவை ஓதுவதே ஷைத்தானிடமிருந்து காக்கும் சிறந்த அரணாகும்.
📌 3. இன்னும் சில நுணுக்கமான ஆலோசனைகள்:
- கண்ணாடி பார்ப்பது: இரவில் கண்ணாடி பார்த்தால் ஜின் பிடிக்கும் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. கண்ணாடி பார்க்கும்போது இறைவனைப் புகழ்வது போதுமானது.
- பயங்கரக் கனவுகள் :
கெட்ட கனவுகள் கண்டால் இடதுபுறம் 3 முறை துப்பி, படுத்திருக்கும் பக்கத்தை மாற்றிப் படுக்க வேண்டும். முக்கியமாக, அந்தக் கனவை யாரிடமும் சொல்லக் கூடாது.
- பிள்ளைகளை அச்சுறுத்தும் கண் திருஷ்டி:
பெற்றோர் அல்லது உறவினர்கள் குழந்தையைப் பார்த்து வியக்கும்போது "அல்லாஹும்ம பாரிக்" எனக் கூறத் தவறினால் குழந்தை அழக்கூடும். அப்படி நடந்தால், அவர்கள் உளு செய்து அந்த நீரால் குழந்தையின் தலையிலும் உடலிலும் ஊற்றினால் உடனே குணமாகிவிடும்.
- அத்கார்களை
(தினசரி ஓத வேண்டிய துஆக்கள்) ஓதும் முறை: துஆக்களை இயந்திரத்தனமாக ஓதாமல், மனதை ஒருமுகப்படுத்தத் தினமும் துஆக்களின் வரிசையை மாற்றி, அர்த்தங்களை உணர்ந்து ஓத வேண்டும்.
📌 4. போலி சிகிச்சை முறைகளும் எச்சரிக்கையும்:
- மூலைகளில் உப்பு தெளிப்பது: வீட்டின் மூலைகளில் உப்பு தெளிப்பது போன்ற செயல்களுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
- ஜின்களின் பொய்யான வாக்குகள்:
ஜின்கள் அடிப்படையில் பொய்யர்கள் (கத்தாப்). ஜின் சொல்லைக் கேட்டுச் சொந்தக் குடும்பத்தினரையோ, பக்கத்து வீட்டாரையோ சந்தேகப்பட்டுப் பகைத்துக் கொள்ளக் கூடாது.
- எண்களை வைத்து ஓதுவது: 1111 முறை, 19 முறை என்றெல்லாம் எண்களைக் குறிப்பிட்டு ஓதுமாறு ஜின்கள் சொல்வதைக் கேட்கக் கூடாது.
📌 5. ஜின் பாதிப்பு vs மூளை/நரம்பியல் நோய் (வேறுபாடு):
- உண்மையான ஜின் பாதிப்பு: நோயாளி தனது சுயநினைவை முழுமையாக இழந்து, தனது சொந்தக் குரல் அல்லாத முற்றிலும் வேறொரு குரல் அல்லது பாணியில் பேசுவார்.
- சுயநினைவு இருந்தால்: நோயாளிக்குச் சுயநினைவு இருந்து, குரலும் மாறவில்லை என்றால் அது ஜின் பாதிப்பு அல்ல; அது நரம்பியல் அல்லது உளவியல் சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம்.
📌 6. சுய ருக்யா (Self-Ruqyah) செய்வதன் மகத்துவம்:
பிறரிடம் ஓதிப் பார்க்கச் செல்வதை விட, பாதிக்கப்பட்டவரே மன உருக்கத்தோடு தனக்குத்தானே ஓதிக்கொள்வது தான் மிகச் சிறந்தது.
- ஓத வேண்டியவை: சூரத்துல் ஃபாத்திஹா, ஆயத்துல் குர்ஸீ, சூரத்துல் பகராவின் கடைசி வசனங்கள், மற்றும் முஅவ்விகதைன் (சூரா ஃபலாக் & சூரா நாஸ்).
📌 7. வீட்டைப் பாதுகாக்கும் எளிய வழிகள்:
1. பிஸ்மில்லாஹ் & ஸலாம்: வீட்டிற்குள் நுழையும் போது "பிஸ்மில்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறுவது ஷைத்தான்களை வீட்டை விட்டு விரட்டும்.
2. இசை தவிர்க்கவும்:
சினிமா படங்கள்,பாடல்கள் மற்றும் இசைக் கருவிகள் ஷைத்தான்களைக் கவரும்.
3. சூரா அல்-பகரா:
வீட்டில் சூரத்துல் பகராவை ஓதுவது ஷைத்தானை ஓடச் செய்யும்.
4. உருவப்படங்கள் & நாய்கள்: வீட்டின் உள்ளே உருவப் படங்களை மாட்டுவதையும், தேவையின்றி நாய் வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
5. இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்): வீட்டில் நஃபில் தொழுகைகளும் தஹஜ்ஜுத்தும் தொழுவது வீட்டை ஆன்மீக ஒளியால் நிரப்பும்.
மார்க்கம் அறியாமையால் மூடநம்பிக்கைகளைப் பின்பற்றாமல், நபிகளார் ﷺ காட்டித் தந்த தூய்மையான வழிமுறைகளைப் பின்பற்றி நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வோம்!
✍️ தொகுப்பு –
Usthadh SM.ismail nadwi
