💥தொடர்-2️⃣2️⃣💥
ஸலப்ஃ அறிஞர்களின் அழகிய உரைகள் .###
💢## சமூக வலைத்தள நீதிமன்றங்களும் : வரம்பு மீறும்
கீ போர்டு போராளிகளும் 💢
முன்னுரை:
சமூக ஊடகக் கலாச்சாரமும் மார்க்க வரம்புகளும்
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஒருவர் மீது குற்றச்சாட்டோ அல்லது தவறோ சுமத்தப்பட்டால், அதை மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டு விசாரித்துத் தீர்வு காண்பதை விடுத்து, அவரைக் கடுமையாகக் கேவலப்படுத்துவதும், பொதுவெளியில் தனிப்பட்ட பழிவாங்கும் உணர்வோடு வீடியோக்களைப் பதிவிடுவதும் பெரும் நோயாக மாறியுள்ளது.
தமது குற்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்களாகவும் பிறரின் குற்றங்களில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகளாகும் மாறும் வலைதள குழப்பவாதிகள் அதிகரித்துப் போவதை நாம் பார்த்து வருகிறோம்.
இதற்கு அடிப்படை காரணம் மறுமையை மறந்த சிந்தனையும் இறையச்சமின்மையுமே, நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் சிந்திக்கும் எண்ணங்களும் நாளை மறுமையில் அல்லாஹ்வால் விசாரிக்கப்படும் என்ற எண்ணம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
கல்க் / خلق படைப்பினங்களுடைய தொடர்பு வலுப்பெற்றதும் காலிக்/ خالق
படைத்தவன் உடைய தொடர்பு வலுவிழந்து போனதும் தான் இன்றைய அவல நிலைக்கு அடிப்படை காரணம்.
குறிப்பாக, மார்க்கத்தை நோக்கி மக்களை அழைக்கும் பிரச்சாரகர்கள் அல்லது அறிஞர்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டதாகக் கூறப்படும்போது, முஸ்லிம் சமூகத்தின் கண்ணியத்தையும் மார்க்கத்தின் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே, மாற்றுக் கருத்துடைய அமைப்புகளையும் கொள்கைகளையும் சீண்டிப் பார்க்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்துவது மிகவேதனையானது.
தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவருக்குரிய சட்டபூர்வ தண்டனை அல்லது சீர்திருத்தம் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த இஸ்லாத்தின் உயிரோட்டமான தவ்ஹீத் பிரச்சாரத்தையும், மார்க்க அறிஞர்களையும் இழிவுபடுத்துவது இஸ்லாமிய நெறிமுறைக்கு முற்றிலுமாய் முரணானது.
"வஹாபிகளின் அழிச்சாட்டியங்களும்
அல்லாஹ்வின் கோபங்களும்"
இது போன்ற பல தலைப்புகளில் இன்று கீ போர்டு போராளிகள் சந்தர்ப்பவாதிகளாக உலா வருகிறார்கள்.
1. தவறு செய்தவரிடம் இஸ்லாம் காட்டும் அணுகுமுறை
இஸ்லாம் தவறை ஒருபோதும் நியாயப்படுத்துவதில்லை; ஆனால், தவறு செய்த ஒரு மனிதனை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு மிகத் தெளிவான ஒழுக்கக் விதிகளைத் தந்துள்ளது.
- குற்றங்களை மறைத்தலும் பாதுகாத்தலும் (ஸத்ருல் அவ்ராத்):
ஒரு முஸ்லிமின் குறையை அல்லது தவறைப் பிறர் அறியாத வண்ணம் மறைப்பது மகத்தான நன்மையாகும்.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
"எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை/தவறுகளை மறைக்கிறாரோ, அல்லாஹு தஆலா அவருடைய குறைகளை இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான்."
(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்: 2699)
- நஸீஹா نصيحة(நலம் நாடுதல்) vs தஃப்தீஹ் تفضيح (கேவலப்படுத்துதல்):
இமாம் இப்னு ரஜப் அல்-ஹன்பலீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ‘அல்-ஃபர்க்கு பைனன் நஸீஹா வத்-தஃப்தீஹ்’
الفرق بين النصيحة و التفضيح
(நலம் நாடுதலுக்கும் கேவலப்படுத்துதலுக்கும் இடையிலான வேறுபாடு) என்ற நூலில் குறிப்பிடுகிறார்:
"முஃமின் என்பவன் தன் சகோதரனின் தவறை மறைத்து, அவனுக்குத் தனியாக அறிவுரை கூறுவான் (நஸீஹா). ஆனால், ஃபாசிக் (பாவி) என்பவன் தன் சகோதரனைப் பொதுவெளியில் அம்பலப்படுத்தி, அவனைக் கேவலப்படுத்துவான் (தஃப்தீஹ்)."
2. கருத்து வேறுபாடுகளும் அறிஞர்களின் கண்ணியமும்: வரலாற்றுச் சான்றுகள்
1.சூரா யாஸீன் (அத்தியாயம் 36 : வசனம் 30)
يَا حَسْرَةً عَلَى الْعِبَادِ ۚ مَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
தமிழாக்கம்:
"அந்த அடியார்களுக்குக் கைசேதமே! அவர்களிடம் எந்த ஒரு தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகசிக்காமல் இருந்ததில்லை."
2. சூரா அல்-ஹிஜ்ர் (அத்தியாயம் 15 : வசனம் 11)
وَمَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
தமிழாக்கம்:
"அவர்களிடம் எந்த ஒரு தூதர் வந்தபோதிலும், அவரை அவர்கள் பரிகசிப்பவர்களாகவே இருந்தனர்."
3. சூரா அஸ்-ஜுக்ருஃப் (அத்தியாயம் 43 : வசனம் 7)
وَمَا يَأْتِيهِم مِّن نَّبِيٍّ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
தமிழாக்கம்:
"அவர்களிடம் எந்த ஒரு நபி வந்தபோதிலும், அவரை அவர்கள் பரிகசிக்காமல் இருந்ததில்லை."
மார்க்க அறிஞர்களும் இஸ்லாமிய அழைப்பாளர்களும் எதிர் கருத்து உடையவர்களால் வஞ்சிக்கப்படுவதும் பரிகசிக்கப்படுவதும் நபிமார்களின் ஒரு சுன்னத் ஆகும்.
சத்தியக் கொள்கையையும் தவ்ஹீதையும் உரக்கச் சொன்ன காரணத்தால், வரலாற்றில் பல மார்க்க அறிஞர்கள் ஆட்சியாளர்களாலும், மாற்றுக் கருத்துடைய அறிஞர்களின் அவதூறுகளாலும் சிறை தண்டனைகளையும் சொல்லொணாத் துன்பங்களையும் அனுபவித்துள்ளனர்.
வரலாற்று நாயகர்களின் தியாகங்கள்:
1. இமாம் அல்-புவைதீ ரஹிமஹுல்லாஹ்:
இமாம் ஷாஃபி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் முதன்மை மாணவரான இவர், 'குர்ஆன் படைக்கப்பட்டது' என்ற தவறானக் கோட்பாட்டை ஏற்க மறுத்ததால், சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பாக்தாத் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கேயே மரணமடைந்தார்.
(ஆதாரம்: இப்னு கதீர் – அல்-பிதாயா வந்நிஹாயா, தொகுதி 10)
2. இமாம் அஸ்-ஸர்கஸீ ரஹிமஹுல்லாஹ்:
ஹனஃபி மத்ஹபின் தலைசிறந்த அறிஞரான இவர், ஆட்சியாளரின் தவறான முடிவைச் சுட்டிக்காட்டியதால் கிணற்று போன்ற சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார். அந்த இருண்ட சிறையிலிருந்தபடியே நினைவாற்றலைக் கொண்டு ‘அல்-மப்ஸூத்’ (30 தொகுதிகள் கொண்ட பிரம்மாண்ட ஃபிக்ஹ் நூல்) என்ற நூலைத் தன் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து எழுத வைத்தார்.
(ஆதாரம்: அல்-ஜவாஹிர் அல்-முதிய்யா ஃபீ தபகாத் அல்-ஹனஃபிய்யா)
3. ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ்:
சத்தியக் கொள்கையை நிலைநாட்டியதற்காகத் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறையிலேயே கழித்து, டமாஸ்கஸ் கோட்டைச் சிறையிலேயே மரணமடைந்தார்.
(ஆதாரம்: அல்-உகூத் அத்-துர்ரிய்யா – இப்னு அப்தில் ஹாதி)
மாற்றுக் கருத்துடைய அறிஞர்களின் உயரிய பண்பாடு:
அக்காலத்து அறிஞர்களிடையே கடும் மார்க்கத் தர்க்கங்களும் ஆய்வு ரீதியான கருத்து வேறுபாடுகளும் இருந்தன. ஆனால், தனிப்பட்ட முறையில் ஒருவரையொருவர் கண்ணியப்படுத்தத் தவறவில்லை.
- இமாம் தாஜுத்தீன் சுப்கி ரஹிமஹுல்லாஹ் மற்றும் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ்:
இமாம் சுப்கி அவர்கள் இப்னு தைமியா அவர்களின் சில ஃபிக்ஹ் முடிவுகளைக் கடுமையாக எதிர்த்தவர். இருப்பினும், இப்னு தைமியா அவர்களின் அறிவையும் கண்ணியத்தையும் அவர் போற்றத் தவறவில்லை.
இப்னு தைமியா அவர்களின் மாணவரான இமாம் இப்னு கதீர் அவர்களுக்கு மதிப்பளித்து, டமாஸ்கஸின் புகழ்பெற்ற 'தாருல் ஹதீஸ் அல்-அஷ்ரஃபிய்யா' கல்வி நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பை வழங்கினார். இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் மரணித்தபோது, அவரது ஜனாஸா தொழுகைக்கு இமாம் சுப்கியின் குடும்பத்தாரும் ஏனைய அறிஞர்களும் தலைமை தாங்கி மரியாதை செலுத்தினர்.
(ஆதாரம்: தபகாத் அல்-ஷாஃபிய்யா அல்-குப்ரா – இமாம் சுப்கி)
3. மார்க்கக் கல்வியின் நோக்கம்: சுய சீர்திருத்தமும் தூய எண்ணமும்
மார்க்கக் கல்வி என்பது பிறரின் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கோ அல்லது சமூகத்தில் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்ப்பதற்கோ அல்ல. அது முதன்மையாகத் தன் சுய சீர்திருத்தத்திற்கே ஆகும்.
இக்லாஸ்)
+
நபிகளாரின் வழிமுறை
=
அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும் அமல்
- இன்னமல் அஃமாலு பின்னிய்யாத்:
அனைத்துச் செயல்களும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன
(ஸஹீஹ் அல்-புகாரி: 1). மார்க்கப் பணியில் சுய விளம்பரமோ, பிறரைத் தாழ்த்தும் எண்ணமோ கலந்துவிட்டால் அது இறைவனிடத்தில் நிராகரிக்கப்படும்.
பூமியில் இருக்கும் மக்களிடத்திலே பிரபலியம் ஆகுவதை விட்டு விட்டு வானத்தில் இருக்கும் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
- பித்அத்களைத் தவிர்த்தல்:
மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படும் அனாச்சாரங்களும் (பித்அத்கள்) மன இச்சையைப் பின்பற்றிச் செய்யப்படும் செயல்களும் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படாது.
- கல்வியின் நோக்கம் அமல் செய்வதே:
நாம் கற்ற கல்வியின்படி முதலில் நாம் வாழ வேண்டும்; பிறருக்கு நன்மையே எவ வேண்டும். பிறரைக் குறை கூறி வழிகெடுப்பது ஒரு داعية (மார்க்க அழைப்பாளரின்) வேலையல்ல.
முடிவுரை:
தற்காலச் சமூகத்திற்கான தீர்வு
சமூக ஊடகங்களில் வைரலாகும் பரபரப்புகளுக்காக ஒரு நபரின் தவறை வைத்து ஒட்டுமொத்த மார்க்கக் கொள்கையையோ அல்லது அறிஞர்களையோ கேவலப்படுத்துவது மிருகத்தனமான செயலுக்கு ஒப்பானது.
1. தவறு செய்தவர்:
தனக்கும் இறைவனுக்கும் இடையில் உண்மையான தவ்பா செய்து, சட்டபூர்வமான நடைமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.
2. சமூக ஊடகப் பயனாளர்கள்: ஆதாரமற்ற வதந்திகளையும், தனிநபர் தாக்குதல் வீடியோக்களையும் பரப்புவதைத் தவிர்த்து, 'ஸத்ருல் அவ்ராத்' என்ற மார்க்கக் கடமையைப் பேண வேண்டும்.
3. மார்க்க அறிஞர்கள்:
தங்களின் சுய சீர்திருத்தத்தில் கவனஞ்செலுத்தி, பொறாமை மற்றும் கொள்கைப் பிளவுகளைத் தாண்டி மார்க்கத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.
மார்க்கக் கல்வியை சுய சீர்திருத்த உணர்வோடு கற்பதும், அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் உறுதியாக நின்று அமல் செய்வதுமே இன்றைய குழப்பமான சூழலுக்கு ஒரே தீர்வாகும்.
- ✍️ உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
